நா உங்க RJ தங்கராஜ்


 வணக்கம் அன்பின் அன்பான உறவுகளே        என் பெயர் தங்கராஜ் சின்னசாமி எனது சொந்த ஊர் மஞ்சள்  மாநகராம் ஈரோடு மாவட்டத்தின்  சின்ன கோடம்பாக்கம்  என்றழைக்கப்படும்  கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள நம்பியூர் -  நாச்சிபாளையம்  கிராமம்  ,விவசாயக்  குடும்பத்தில்  பிறந்தவன்  , ஜவுளி தொழில்நுடபத்தில்  ஆர்வம்  காரணமாக ஜவுளி தொழிநுட்ப   பட்டப் படிப்பை முடித்து விட்டு கோவை மாவட்டம் சோமனூரில் நூற்பாலை  ஒன்றில்  மேலாளராக பணிபுரிந்து  கொண்டிருக்கிறேன் . ஆனாலும்  இளம் வயதில் அனைத்து இலக்கிய மன்ற மேடைகளிலும்  பங்கு பெறுவதில்  ஆர்வம் காட்டியிருக்கிறேன்  , ஊடகத் துறையின் மீது  அளவில்லாக் காதல் கொண்டவன் , கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில்  செய்தியாளராக  இருக்கிறேன் , என் நண்பர்கள் தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டே   இருக்கிறார்கள், தமிழ் உச்சரிப்புக்காக  என் செய்திகளை  பார்ப்பவர்கள்  அதிகம் , ஆனாலும் 2019இல் நிகழ்ந்த  சாலை விபத்து என்னை முழுமையாக முடக்கியது  , மீண்டும் களம் இறங்கினாலும்  முன்பு  போல் நிகழ்வுகளை தர இயலவில்லை , அப்போது  தான் இந்த கொரோனா உலகக் கொள்ளை அரக்கனும்  தமிழகத்தில் கால் வைத்தான்  .மார்ச் 22 ,2020 முதல் முழு  ஊரடங்கு போடப்படுகிறது  , அந்த நேரத்தில் தான் அன்பு வானொலி பற்றி நண்பன் சுரேஷ் மூலமாக   அறிந்து அதன் பின்னர் இயக்குனர் அன்பழகன் அவர்களைத்  தொடர்பு கொண்டேன் . உடனே வேலையும்  கிடைத்தது  முதற்கட்ட பயிற்சிக்கு  பிறகு ஏப்ரல் 2 2020 ம் ஆண்டு அறிவிப்பாளராக  அறிமுகம் ஆனேன் .சமூக ஊடகங்களில்  ஓரளவு  தெரிந்த முகமாக  இருந்தாலும் வானொலி   பயணம் எப்படி இருக்குமோ என பயந்து  கொண்டே பயணித்தேன்  .ஆனாலும் நம்பிக்கையோடு களமிறங்கினேன்  ,பக்கபலமாக இயக்குனர் திரு  அன்பழகன் அவர்கள்   ,அக்கா திருமதி  இளையவேணி கிருஷ்ணா அவர்கள் ,திருத்தணி  திரு.ஹரி அண்ணா அவர்கள் , கோவை பண்பலை தொகுப்பாளர் ஆருயிர் அண்ணா திருமிகு ஆ.சந்துரு அவர்கள் , அன்பு அண்ணன் என் ஊடக ஆசான் திருமிகு நெற்றிக்கண் க.மனோகரன் அண்ணா  இவர்கள்  துணையாய்   இருக்க தைரியமாக  களத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளையும்  தொகுத்து  வழங்கினேன் . வேலை இல்லாத  போது அதுவும் உயிருக்கு உயிராய்  நேசித்த  ஒரு வேலை கிடைத்தால் ஒருவன் எப்படி 100 சதவீத  உழைப்பை  கொடுப்பானோ அந்த நோக்கில்  கிடைக்கும் நேரத்தில் பல புதிய நிகழ்ச்சிகளையும்  அன்பு காற்றலையில் தொகுத்து வழங்கினேன் .அதன் பிறகு கிடைத்த அங்கீகாரம்  அளப்பரியது  , 112 நாடுகளில் ஒலிக்கும் அன்பு வானொலியின் அடையாளக்  குரலாக  என்னை வளர்த்தெடுத்தது  நட்சத்திர நேர்காணல் .அதில் நான் சந்தித்த அத்தனை பேருமே சாதனையாளர்கள்  அவர்களை நேர்காணல் செய்யும் பாக்கியமும்  எனக்கு  கிடைத்தது  இறைவன் எனக்களித்த வெகுமதி  என்று தான் சொல்ல வேண்டும் , சமூகத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவைச்  சார்ந்தவர்களின்  அறிமுகமும்  அவர்களின் வாழ்க்கைப்  பயணமும்  நெகிழ  வைத்தது . இப்போது எந்த  ஊருக்குச் சென்றாலும்  அங்கு என் வானொலி நண்பர்கள் இருக்கிறார்கள் வேறென்ன  கவலை என்கிற  தைரியத்தோடு  செல்வேன்  .கடல் கடந்தும் ஆதரவு தரும் உலகத் தமிழ் நெஞ்சங்கள்  இருக்கும் வரை ஐயமின்றி  பயணிப்பேன் . என்னையும் ஒரு அறிவிப்பாளராக , நிகழ்ச்சித் தொகுப்பாளராக, செய்தியாளராக  உச்சம் தொட வைத்த என் அன்பு வானொலிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் .  கோடான கோடி உலகத் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும் .இன்னும் பல உச்சங்களை நம் அன்பு வானொலி தொட ஐந்தாம்  ஆண்டு உதய நாளில் வாழ்த்தி விடைபெறுகிறேன் , இயற்கையையும் வெல்லுவான் இடையறா முயற்சியாளி           💐💐🙏🏼🙏🏼ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳

Comments