இலக்கிய ஆளுமைகளின் மாண்புமிகு
தமிழ்த் தொண்டு.
( பி. எச். அப்துல் ஹமீட் (B. H. Abdul Hameed)
வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் )
பிறப்பு: தெமட்டகொடை, கொழும்பு
தேசியம்: இலங்கை
கல்வி: தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம்
அறியப்படுவது: கலைப்பணி வானொலி ஒலிபரப்பாளர்
பெற்றோர்: ஹசன் (தந்தை) ஹாசியா உம்மா (தாய்)
பி. எச். அப்துல் ஹமீட் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட, பன்னாட்டுப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர். அப்துல் ஹமீட் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும்,இந்தியா,சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார்.
அப்துல் ஹமீது கொழும்பு நகரில், தெமட்டகொடை என்ற புற நகர்ப்பகுதியில், ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு, நான்காவது மகனாகப் பிறந்தவர் ஆவார். இவருக்கு மூத்தவர்கள் மூவரும் ஆண் சகோதரர்கள். இவருக்கு மூன்றரை வயதிருக்கும் போதே, தந்தையார் காலமாகி விட்டார். தாயார் கடையப்பம் தயாரித்து தர, அதை இவர் சுமந்து விற்று வருவார்.
ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். அங்கு இவர் ஆ. பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம், ஆகியோரிடம் தமிழ் கற்றார்.
பள்ளியில் படித்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.1960 ஆம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்து லடிஸ் வீரமணி அவர்களின் பாராட்டைப் பெற்றார்
சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ. ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பில், இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இக்காலகட்டத்தில் வானொலி நிலையக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் மன்றத்திற்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமான நாடகம், மற்றும் உரைச்சித்திரம், தயாரிக்கவும் குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன.
பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக இவர் நியமனம் பெற்றார். இவருடன் எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, இருதய ஆனந்தராஜ், ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் தெரிவாகினர்.
செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணணையாள ராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடக கலைஞராக பல்வேறு பணிகளிலும் காலூன்றினார்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்திலேயே,ஏராளமா ன நிகழ்ச்சிகளை, வர்த்தக சேவையிலும், தேசிய சேவையிலும், தயாரித்து வழங்கியிருக்கிறார். இவர் தயாரித்த நாடகங்கள் இரண்டு சேவைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
சில்லையூர் செல்வராசனின் 'றோமியோ ஜூலியற்' கவிதை நாடகம் எஸ்.ராம்தாசின் "கோமாளிகள் கும்மாளம்"கவிஞர் அம்பியின் "யாழ்பாடி"இந்த நாடகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவின்போது இறுவட்டாக வெளியிடப் பட்டது."ஒரு வீடு கோவிலாகிறது" நடிகர்திலகம் சிவாஜி கணேசனால் பாராட்டப் பெற்றது.
தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றிய
எம்.அஷ்ரப்கானின் அனிச்ச மலர்கள் ,சக்கரங்கள்
கே.எஸ்.பாலச்சந்திரனின் "கிராமத்துக்கனவுகள்"
"பாட்டுக்கு பாட்டு" முதலான வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளை, வானொலி மூலம் அறிமுகப் படுத்தியவர் இவரே. இத்தகைய நிகழ்ச்சிகள், கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பைப் பெறுகின்றன.
இந்திய தொலைக்காட்சி நிலையங்கள், போட்டி போட்டுக்கொண்டு இவர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.
இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப் படத்தில் நடித்த இவர், தென்னிந்திய சினிமாவிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளார். கே. எஸ்.ரவிகுமாரின் தெனாலி,மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப் படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது
இலங்கையிலும், இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார்.
1990 ஆம் ஆண்டு தனது கலையுலக நண்பர்களான எஸ்.ராம்தாஸ்,எஸ்.செல்வசேகரன்,ரி.ராஜகோபால், கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளி விழாவைக் கொண்டாடினார்.
அருள் செல்வன் கூறியதாவது : நம் இந்திய தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர், யார் வந்தவர் என்று நமக்குத் தெரியாது. காரணம் அவர்களது பெயர்கள் அன்று அறிவிக்கப்பட்டதே இல்லை. அந்த அளவுக்கு எந்திரத்தனமாக வைத்திருந்தார்கள்.
ஆனால் இலங்கை வானொலியில் பணியாற்றுவோரின் ஒவ்வொருவர் பெயரும் தெரிவதால் அவர்களுடன் நாமும் பயணித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றும். அவர்கள் பணியை உணரவைக்கும்.
பி.எச்.அப்துல் ஹமீது பணியாற்றியபோது விசாலாட்சி ஹமீது என்ற அறிவிப்பாளரும் இருந்தார். பெரும்பாலானவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றுதான் நினைப்பார்கள். அந்தக் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக அந்த இருவரும் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் பி.எச் அப்துல் ஹமீத் விடைபெறும்போது, "உங்களிடமிருந்து விடை பெறுபவர் சகோதரி விசாலாட்சியுடன் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்" என்பார்.
அப்போது "சகோதரி" என்பதை அழுத்திச் சொல்வார். இருந்தாலும் அவரைப் பார்க்கிறவர்கள் எல்லாம் விசாலாட்சி உங்கள் மனைவியா என்று கேட்பார்களாம். அந்தத் தர்மசங்கடக் கேள்வி கடைசிவரை அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் நேரில் பார்த்தபோது வருத்தத்துடன் சொன்னார்.
அப்போது இலங்கை வானொலியும் தமிழ்த் திரையுலகமும் பின்னிப்பிணைந்து கிடந்தன. இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் படங்கள் எல்லாம் எடுத்தார்கள்.அப்போது இலங்கை நடிகை கள் தமிழ்ப் படங்களில் நடித்தார்கள். "பைலட் பிரேம் நாத் " படத்தில் சிவாஜிகணேசனுடன் பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா இணைந்து நடித்திருந்தார். அது சார்ந்த பாடல்கள் கூட ஞாபகத்தில் இருக்கின்றன.
'இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ?' என்றொரு பாடல் உண்டு.
'அழகி ஒருத்தி இளனி விக்கிறா கொழும்பு வீதியிலே; அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே' என்றும் ஒரு பாடல் உண்டு. 'தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை' என்றொரு பாடல் வரும்.
அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அது மட்டுமல்ல இலங்கை மண் சார்ந்தவையாக சில பாடல்கள் ஒலிக்கும். அதில் மறக்க முடியாத பாடல் அங்கேயே தயாரித்த 'மாமியார் வீடு' என்ற படத்தில் ஜோசப் ராஜேந்திரன் பாடியது.
'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள் .'என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கும்.
அது மட்டுமல்ல 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ படிக்கப் போனாளோ?' என்ற அந்த நையாண்டிப் பாடலும், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே; காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்' என்ற மதுவிலக்கு அறிவுரைப் பாடலும் அடிக்கடி ஒலிக்கும்.
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தரவரிசை நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வாராவாரம் தேர்வாகும். அதில் மாம்பூவே சிறு மைனாவே என்ற சந்திரபோஸ் இசையமைத்த அன்னக்கிளி படப் பாடல் மச்சானை பார்த்தீங்களா ஓராண்டு தாண்டி யும் பல வாரங்கள் முதலிடத்திலேயே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
இலங்கை வானொலியில் ஒலித்த தமிழ்த் திரைப் படங்களின் விளம்பரங்கள் கூட நினைவில் பதிந்துள்ளன. உழைக்கும் கரங்கள், சங்கிலி, திசை மாறிய பறவைகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற பட விளம்பரங்களில் அது சார்ந்த பாடல், வசனம் என்று சில வரிகளைப் போட்டு ஒலிபரப்புவார்கள். புதுமையாக இருக்கும்.
அறிவிப்பாளர்களே தங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'என் விருப்பம்' என்ற நிகழ்ச்சி வரும். அதில் அறிவிப்பாளர்களுக்குப் பிடித்த பாடல்கள் வரும். ஏன் பிடித்தது என்பதையெல்லாம் சொல்வார்கள். அதிலிருந்து ரசனைப் புரிதலால் ஒவ்வொருவரையும் நமக்கு நெருக்கமாக உணர்வோம்.
'இசையமைப்பாளர்' என்றொரு பகுதி குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை அதில் தொகுத்து வழங்குவார்கள்.
இப்படி நிறைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.சில நேரம் மரண அறிவித்தல் வரும். அப்போது மட்டும் மனதுக்கு ’திக்’கென்று இருக்கும்.
அப்போதெல்லாம் எங்கள் ஊர்ப்பகுதியில் எங்கே எந்த விவசாய வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கே ஒரு வானொலிப் பெட்டி கம்பீரமாக அமர்ந்திருக்கும். அந்த உழைக்கும் மக்களின் சுவாசமாகவும் ஆசுவாசமாகவும் இலங்கை வானொலி இருந்தது.
மின்சார வசதி கூட இல்லாத காலம் அது. எங்கள் பகுதியில் மிக மிக அவசியமான பொருட்களாக வெல்லம், டீத்தூள் இருக்கும். தேநீர் போட பால் கூட அடுத்த பட்சம்தான். ஆனால் அச்சு வெல்லம் டீத்தூள் கண்டிப்பாக வாங்குவார்கள். இந்த அத்தியாவசியப் பட்டியலில் அடுத்த படியாக வானொலிக்கு பேட்டரி வாங்குவது என்று பட்ஜெட்டில் வைத்திருப்பார்கள். அது இலங்கை வானொலிக்காகத்தான்.
தங்களை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் என நினைப்பார்கள்.
புகையிலை சாகுபடி இருக்கும்போது கொல்லை நடுவில் வானொலி இருக்கும். கொல்லை முழுதும் கேட்கும். நாலு பக்கமும் புகையிலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள்.வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும் .
உற்ற தோழனாக உற்சாகம் தரும் ஊக்க மருந்தாக சிலநேரம் கிரியா ஊக்கியாகவும் அந்த வானொலி தோன்றும். வயல்களில் நீர் நிறைந்து நெல் சாகுபடிக் காலம் என்றாலும் வயல் வரப்புகளில் வானொலிப் பெட்டி உட்கார்ந்து இருக்கும். அல்லது மரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு திரிவார்கள். சிலர் சைக்கிளில் பொருத்தி வைத்துக் கொண்டே பயணிப்பார்கள்.
கருவேலங்காட்டில் சருகு குவிக்கப்போனாலும் முள் மரங்கள் நடுவே கூட அங்கே வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும். உழைப்பின் எல்லா வலிகளையும் போக்கும் அருமருந்தாக வானொலி காதுகள் வழியே மனதிற்குள் களிம்பு பூசிக்கொண்டிருக்கும். அதற்குக் காரணம் அவ்வளவு நிகழ்ச்சிகள் வரும்.
காலை நிகழ்ச்சிகள் 10 மணிக்கு முடிந்தாலும் அடுத்து நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும். "நம் ஆல் இண்டியா ரேடியோவை" அதற்குள் இரண்டு முறை மூடித் திறந்து விடுவார்கள்.
காலை 10 மணி முதல் பகல் 12 வரை மணி வரைதான் இடைவெளி. அப்போது நிலையம் மாற்றினால் ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது இன்னொருவர் மிருதங்கம் வாசிப்பார் அல்லது 'மாயா மாளவ கௌள' பாடிக்கொண்டிருப்பார். யாரோ ஒருவர் லயவின்யாசம் செய்வார். யாராவது தலைவர்கள் இறந்து விட்டால் , ஒரு வாரம் சோக இசை போட்டே இழுப்பார்கள். அப்போதெல்லாம் இலங்கை வானொலிதான் எங்களைக் காப்பாற்றும்.
இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை.
சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக்கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.
லைட்ஸ் ஆன், டயலாக் , விஷ்வல் பேஸ்ட், புக் ஷெல்ப், பயோடேட்டா, ரீடர்ஸ் ஒபீனியன், ஆட்டோகிராப், ரேஷன் கார்டு, டவுன்லோடு மனசு, ப்ளாஷ்பேக், இன்பாக்ஸ், ப்ளாக் அண்ட் ஒயிட், டாப் ஆங்கிள், கமெண்ட்டூன், ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்டென் மூவீஸ், சூப்பர் சிங்கர், டிரைலர் டைம், சாங் ஃபார் யூ, க்ரைம் டைம், க்ரைம் ஸ்டோரி, ப்ரைம் டைம், பயோகிராபி, ஹலோ டாக்டர், கிச்சன் டைம் ,பிக் பாஸ், கனெக்ஷன்ஸ், ஜீன்ஸ், மியூசிக் ட்ராக்ஸ், மேக்ஸ் மசாலா, மிட்நைட் மசாலா, கிராமபோன், செம காமெடி, கோலிவுட் ஹிட்ஸ், என்றும் சூப்பர், சினி டைம்
இவை எல்லாம் என்ன தெரியுமா? இன்றைய பிரபல அச்சு, காட்சி ஊடகங்களில் வரும் பிரபலமான தலைப்புகள். இவற்றில் எங்காவது தமிழ் இருக்கிறதா? இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .
'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப்பேசுங்கள்’என்று சொல்லமாட்டார்கள்’ ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது’ என்றுதான் சொல்வார்கள்.
அந்தத் தமிழ் இன்று எங்கே போனது? தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் ரசனையை மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள். அது மட்டும் அல்ல, அந்த மண்ணில் புழங்கும் வார்த்தைகளான காலக்கிரமத்தில், மணித்தியாலம், வழமைபோல், கமக்காரர்கள் போன்ற சொற்களைக் கேட்கும்போது புதிதாக இருக்கும்.
இலங்கை வானொலியின் மூலமாக காதுகளுக்குள் கவரி வீசி மனதிற்குள் மகரந்தம் தூவிய அறிவிப்பாளர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். சைக்கிளில் சென்றால் கூட இரண்டு மணி நேரத்தில் சென்று விடக் கூடிய தூரம்தான். ஆனால், இடையில் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அது வேறு நாடாகவும் இருக்கிறதே என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கும்.
ஒவ்வொருவரையும் சென்று பார்க்கவேண்டும் பேசவேண்டும் பழகவேண்டும் என்கிற அவா அடி மனதில் உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால் எதுவுமே வாய்க்கவில்லை. நான் சந்தித்த ஒரே ஒரு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் மட்டும்தான். நான் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சியில் இன்றும் உயிர்ப்போடு நிகழ்ச்சிகளை வழங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
திரைப்படப் பாடல்கள் சார்ந்த அவரது அனுபவமும் அறிவும் அபரிமிதமான நினைவாற்றலும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல மிரளவைக்கும். அவர் பழகுதற்கு இனிய பண்பாளர் என்கிறார் அருள் செல்வன்.
நன்றி.
ரஹ்மத் ராஜகுமாரன்
பி.எச்.அப்துல் ஹமீட்

Comments
Post a Comment